வியாழன், 10 ஜூலை, 2014

பதினெண் கீழ்கணக்கு..!


ஊடல் முற்றி ஓர் நாள் என்னவள்
காடு தாண்டி அவளின் கூடலூருக்கு சென்றுவிட்டாள்..!
அன்பின் ஆரணங்கவளை அழைக்க
ஆரண்யம் தாண்டி சென்றேன்..
நடைவழி பயணத்தில்
நாலடியார் அங்கு வந்தார்..!
நாட்டு நடப்பை பேசிக் கொண்டே
நான்மணிக் கடிகைப் பாதையில்
இன்னா நாற்பதை சொல்லிக் கொண்டே
அவளின் இனியவை நாற்பதை எண்ணிக் கொண்டே
களவழி நாற்பதைக் கடந்த போது
காற்வழி நாற்பது கை நீட்டி அழைத்த்து..!
ஐந்திணை ஐம்பதும்
திணைமொழி ஐம்பதும்
ஐந்திணை எழுபதோடு ஆர்ப்பரித்து நின்றது
திணைமலை நாற்பதும் திசை காட்டி நின்றது..!
அங்கே திருக்குறள் தென்றல் வீசும்
திரிகடுகச்சாரலில்-என்
ஆசாரக் கோவையவள்
அழகெழிலாய் நின்றாள்..!
என் பாரி அவளுக்கு
பழமொழி நானூறும் சொல்லி
சிறுபஞ்சமூலம்.. கரம் பிடித்து
முதுமொழிக்காஞ்சிக்கு
அழைத்து வந்தேன்...
அவளில்லா என் வாழ்வு
வலக்கை இழந்த நிலை
வருத்தமாய் உணர்த்திட்டேன்..
ஏலாதிப் பட்டினத்தில்
அவளுடன் ஏகாந்தம் தினம் துய்த்து
கைந்நிலை உணர்த்திட்டேன்..
பதினெண்கீழ்கணக்கு நூலணைத்தும்
பகிர்ந்து கொண்டே..
பால் நிலவு எழிலவள்
ஊடல் களைந்தாள்..
கூடல் மொழி பொழிந்தாள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக